கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெட்டதாபுரத்தில் சக்தி இன்ஜினியரிங் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு 320 மாணவர்களும், 70 மாணவிகளும் படித்து வருகின்றனர். நேற்று மதியம் மாணவர்கள் கல்லூரியை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது, கடந்த 10- ஆம் தேதி விடுதியில் மாணவர்களுக்கு சாப்பாடு வழங்கப்பட்டது. அப்போது தட்டப்பயறு குழம்பு இருந்ததை பார்த்த பிரசாந்த், காண்டியப்பன், யுவராஜ், அபிநவ் ஆகியோர் கல்லூரி முதல்வர் பால் பிரபுவிடம் இது குறித்து கேட்டனர். அப்போது கோபத்தில் முதல்வர் மாணவர்களை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
எனது தரமான உணவு வழங்குவதோடு கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அறிந்த கல்லூரி சேர்மன் தர்மலிங்கம் அங்கு விரைந்து சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மாதம் ஒருமுறை தானும், தாளாளர் கார்த்திகேயனும் கூட்டம் நடத்தி மாணவர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்தார். மேலும் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறிய பிறகு 2 மணி நேர போராட்டத்தை கைவிட்டு மாணவ மாணவிகள் கல்லூரிக்குள் சென்றனர்.