உக்ரைன் மீது மிகப்பெரியளவில் தாக்குதலை நடத்துவதற்கான திட்டமில்லை என ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24- ஆம் தேதி தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இதற்கு உக்ரைன் ராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றது. தற்போது வரை நீடித்து வரும் இந்த போரில், இரு தரப்பில் மிகப்பெரியளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போருக்கு கண்டனம் தெரிவித்து உலக நாடுகள் ரஷ்யா மீது வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்துள்ளன. உக்ரைனிலிருந்து வெளியேறிய லட்சக்கணக்கான மக்கள், அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். மேலும் உக்ரைனுக்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில் கஜகஸ்தான் நாட்டின் தலைநகரான அஸ்தானாவில் நடைபெற்ற ரஷ்யா-மத்திய ஆசிய நாடுகள் இடையிலான மாநாட்டில், ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்றார். இந்த மாநாட்டில் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான்துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் அதிபர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியதாவது, “ரஷ்யாவுடன் நேட்டோ படைகள் நேரடியாக மோதினால், அது உலகளாவிய பேரழிவிற்கு வழி வகுக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.
அனைத்து பிரச்சினைகளையும் அமைதியான முறையில் தீர்க்க வேண்டும் என கூறி வரும் நட்பு நாடுகளான இந்தியா, சீனாவின் நிலைப்பாட்டை ரஷ்யா மதிப்பாதாக தெரிவித்துள்ளார். அதே சமயத்தில் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என உக்ரைன் அதிகாரப்பூர்வமாக முடிவெடுத்துள்ளதாக தெரிவித்த அவர், உக்ரைனை அழிப்பது ரஷ்யாவின் நோக்கம் அல்ல என்று தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது மிகப்பெரியளவில் புதிய தாக்குதலை நடத்துவதற்கான திட்டமில்லை என்று தெரிவித்த அவர், உக்ரைன் படையெடுப்பில் ரஷ்யா எல்லாவற்றையும் சரியாகவே செய்து வருவதாக” அவர் குறிப்பிட்டுள்ளார்.