உதிரியாக விற்கப்படும் இனிப்புகளிலும் தயாரிப்பு தேதி குறிப்பிடுவது கட்டாயம் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அறிவித்துள்ளது.
பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் இனிப்புகளில் தயாரிப்பு தேதியை குறிப்பிடுவது ஏற்கனவே கட்டாயமாக உள்ளது. இந்நிலையில் பாக்கெட்டில் அடைக்காமல் உதிரியாக விற்கப்படும் இனிப்புகளிலும் தயாரிப்பு தேதி மற்றும் எந்த தேதிவரை சாப்பிட உகந்தது என்று குறிப்பிடுவது வருகிற ஜூன் 1ம் தேதியில் இருந்து கட்டாயம் ஆக்கப்படுகிறது என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அறிவித்துள்ளது.
கண்ணாடி பெட்டியிலோ, தட்டிலோ வைக்கப்படும் உதிரி இனிப்புகளிலும் மேற்கண்ட விவரங்களை எழுதிவைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த விதிமுறை கடைபிடிக்கப்படுகிறதா இல்லையா என உணவு பாதுகாப்பு ஆணையர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
பழைய மற்றும் காலாவதியான இனிப்புகளை விற்பனை செய்வது சுகாதார அபாயத்தை ஏற்படுத்துவது குறித்து அதிகளவில் புகார்கள் வரத்தொடங்கியதை அடுத்து பொதுநலன் கருதி எஃப்எஸ்எஸ்ஏஐ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னதாக பால் கொண்டு தயாரிக்கப்படும் ரசகுல்லா, பாதாம் பால், ரசமலாய், ராஜ்பாக் போன்ற இனிப்பு வகைகள் தயாரிக்கப்பட்ட இரண்டு நாள்களுக்குள் சாப்பிட வேண்டும் என கடந்த ஆண்டு வழிகாட்டுதல் குறிப்பு ஒன்றை எஃப்எஸ்எஸ்ஏஐ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.