ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அமெரிக்கா நடத்திய விமானத் தாக்குதலில் அல் ஷபாப் அமைப்பின் முக்கியத் தீவிரவாதி கொல்லப்பட்டான்.
அல் ஷபாப் (Al-Shabaab) என்ற தீவிரவாத இயக்கம் சோமாலியாவைத் தலைமயிடமாக கொண்டு இயங்கி வருகின்றது. இந்த அமைப்பு மிகவும் பயங்கரமான தாக்குதலை நடத்தும். ஆம், கொடூரத் தாக்குதல் மற்றும் கோரமான கொலைகளுக்கும் பெயர்போனது தான் இந்த அமைப்பு. இது அல் கொய்தா (Al-Qaeda) அமைப்பின் கிளை அமைப்பாகச் செயல்பட்டு வருகின்றது.
சோமாலிய ராணுவத்துக்கும், அல் ஷபாப் அமைப்புக்கும் இடையே அடிக்கடி தாக்குதல் நடைபெற்று வருகிறது. சோமாலிய ராணுவத்துடன் இணைந்து அமெரிக்க ராணுவமும் அவ்வப்போது அல் ஷபாப் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வேட்டையாடி வருகிறது.
இந்தநிலையில் கென்ய எல்லைப்பகுதியில் இருக்கும் சாகோவ் என்ற இடத்தில் அல் ஷபாப் இயக்கத்தினுடைய முக்கியத் தலைவன் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அமெரிக்க விமானங்கள் அவ்விடத்துக்குச் சென்று குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில், அந்தத் தலைவன் மற்றும் அவனுடன் இருந்த மற்றொருவனும் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால் கொல்லப்பட்டதாக குறிப்பிட்ட தீவிரவாதி பற்றிய தகவலை அமெரிக்கா வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.