கோடியக்கரை அருகே நடுகடலில் மீனவர்களை தாக்கி மீன்கள் மற்றும் வலைகளை பறித்துச் சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி அருகே இருக்கும் பெருமாள்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த பூவரசன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், தென்னரசன், நிவாஸ், அருள்ராஜ், சரத் உள்ளிட்ட ஆறு மீனவர்கள் சென்ற 12-ம் தேதி மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளார்கள்.
இவர்கள் நேற்று முன்தினம் இரவு கோடியக்கரையிலிருந்து 20 நாட்டிகள் கடல் தூரத்தில் இலங்கை எல்லை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது நான்கு படங்களில் வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் மீனவர்களின் படகின் மீது மோதி கற்கள், கட்டைகளால் தாக்கி படகிலிருந்து மீன்கள் மற்றும் வலைகளை பறித்துச் சென்றார்கள்.
இதையடுத்து நேற்று அதிகாலை மீனவர்கள் கரை திரும்பினார்கள். காயம் அடைந்த மீனவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இதுகுறித்து பூவரசன் கொடுத்த புகாரின் பேரில் கடலோர காவல் படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த தாக்குதல் நடந்த சம்பவம் நாகை எல்லையில் வருவதால் கீழையூர் கடலோர காவல் படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.