டெல்லியில் சட்டம் – ஒழுங்கு சரியாகி வருகின்றது என தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர்.
அப்பகுதியில் வாகனங்கள், கடைகள் மற்றும் ஒரு ஒரு பெட்ரோல் நிலையம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இந்த வன்முறை காரணமாக ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா பகுதிகள் போர்க்களமாக மாறின. இதனிடையே கோகுல்புரி பகுதியில் கல்வீச்சு சம்பவத்தில் படுகாயமடைந்த தலைமைக்காவலர் ரத்தன் லால் என்பவர் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார்.
இவர் ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியைச் சேர்ந்தவர். மேலும் இந்த வன்முறையில் பொதுமக்களில் 15 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 160க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை 18ஆக அதிகரித்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது.
கடந்த நான்கு நாட்களாக டெல்லியில் நடைபெற வன்முறையில் உயிரிழப்பு எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தை வரவழைக்க வேண்டும். காவல்துறையினாரால் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றார். அதில் பாதுகாப்பு பணியில் துணை ராணுவ வீரர்கள் கூடுதலாக ஈடுபட்டு வருகின்றார்கள் என்றும் , டெல்லியில் சட்டம்-ஒழுங்கு நிலை கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது .வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடபட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் போலீசுடன் சிஆர்பிஎப் வீரர்களும் ஈடுபட்டுள்ளனர் என்று அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.