கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி சாலையில் பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் வைத்து கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் எழுதிய தடை ஒன்றுமில்லை என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த புத்தகத்தை மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி வெளியிட்டார். இந்த விழாவில் பாஜக கட்சியைச் சேர்ந்த எச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், சி.பி ராதாகிருஷ்ணன், எஸ்.ஆர் சேகர் மற்றும் பாஜக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பேசியதாவது, வானதி சீனிவாசன் அவர்கள் தடையொன்றுமில்லை இந்த புத்தகத்தை எழுதியவர்.
இந்த புத்தகத்தில் வானதி சீனிவாசன் குழந்தைப் பருவத்தில் இருந்து தற்போது வரை எதிர் கொண்ட சவால்கள் மற்றும் பிரச்சனைகள் போன்றவற்றை குறிப்பிட்டுள்ளார். பெண்கள் படிக்கும்போதே தாங்கள் எந்த மாதிரியான தொழிலில் ஈடுபட வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். அதோடு இல்லத்தரசிகளாக இருக்க வேண்டும் என்பதையும் தீர்மானம் செய்ய வேண்டும். பெண்களை தங்களுடைய வாழ்நாள் முழுவதும் தாயாக, மகளாக மற்றும் மனைவியாக மதிக்க வேண்டும். தடையொன்றுமில்லை என்ற புத்தகத்தை படித்தால் கண்டிப்பாக பெண்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைய முடியும் என்றார்.
இந்நிலையில் வானதி சீனிவாசன் புத்தகம் குறித்து கூறுகையில், இந்த புத்தகம் என்னுடைய சுயசரிதை கிடையாது. என்னுடைய வாழ்க்கை அனுபவங்களை மட்டுமே எழுதியுள்ளேன். நான் சாதித்ததற்கு என்னுடைய கணவரும் மகன்களும் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். பாஜக எனக்கு நல்லதொரு பதவியை கொடுத்துள்ளது. அதோடு முக்கியமான பொறுப்புகளையும் வழங்கியுள்ளது. பல பெண்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தான் உதாரணம். மேலும் பெண்கள் தங்களுடைய வாழ்க்கையில் உயரமான பதவிகளை அடைவதற்கு இந்த புத்தகம் உதவும் என்றார்.