பாறைக்குழியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி பிணமாக மீட்பு.
திருப்பூரில் உள்ள அவிநாசி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரமேஷ் குமார் என்பவரின் மகள் காயத்ரி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். அப்போது மாணவிக்கு ஒரு மாணவருடன் பழக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகின்றது. இது குறித்து பெற்றோருக்கு தெரிய வர காயத்ரியை அவிநாசி பள்ளியில் இருந்து விடுவித்து திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சென்ற மாதம் சேர்ந்தார்கள். மேலும் வீட்டிலிருந்து சென்று வந்த காயத்ரியை காலாண்டு விடுமுறைக்கு பிறகு ராயபுரத்தில் இருக்கும் அரசு மாணவிகள் விடுதியில் தங்கி படிக்க சில நாட்களுக்கு முன்பு சேர்த்தார்கள்.
இந்த நிலையில் சென்ற 12ஆம் தேதி மாலை காயத்ரியின் தந்தை ரமேஷ் குமார் மகளை பார்ப்பதற்காக பள்ளி முடிந்ததும் சென்றார். ஆனால் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் மகள் வராததால் பள்ளிக்குச் சென்று கேட்டிருக்கின்றார். அங்கு ஆசிரியர் காயத்ரி இன்று பள்ளிக்கு வரவில்லை எனக் கூறியுள்ளார். இதனால் பதறிப் போய் அவர் விடுதிக்குச் சென்று கேட்ட பொழுது அங்கிருந்த ஊழியர் காயத்ரி காலையிலேயே பள்ளி உடையில் புத்தக பையை எடுத்துக் கொண்டு சென்று விட்டதாக கூறினார். பல இடங்களில் தேடி இருக்கின்றார். ஆனால் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் திருமுருகன்பூண்டியை அடுத்த அம்மாபாளையம் அருகே கானக்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான பாறைக்குழியில் பள்ளி சீருடையில் மாணவியின் உடல் இருப்பதாக போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மாணவியை மீட்டார்கள். பின் யாரேனும் மாணவியை காணவில்லை என புகார் கொடுத்திருக்கின்றார்களா என விசாரித்தபோது சென்ற 12ஆம் தேதி தனது மகள் காயத்ரியை காணவில்லை என ரமேஷ் குமார் புகார் கொடுத்தது தெரிய வந்தது.
இதன்பின் ரமேஷ் குமார் மற்றும் அவரின் மனைவி உள்ளிட்டோரை சம்பவ இடத்திற்கு வரவழைத்து அடையாளம் காட்ட சொன்னபோது அவர்கள் மாணவியின் உடலை பார்த்து கதறி கதறி அழுதார்கள். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில் சம்பவத்தன்று மாணவி காயத்ரியுடன் மூன்று பேர் பாறைகுழிக்கு சென்றது தெரிய வந்தது. சம்பவம் நடந்து ஐந்து நாட்கள் ஆகியும் காயத்ரியுடன் சென்ற மூன்று பேர் ஏன் இந்த தகவலை வெளியில் கூறவில்லை என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.