நடிகை ரேவதி தற்போது பாலிவுட்டில் கஜோலை வைத்து “சலாம் வெங்கி” என்கிற படத்தை இயக்கி வருகின்றார்.
நடிகை ரேவதி தற்போது பாலிவுட்டில் கஜோலை வைத்து “சலாம் வெங்கி” என்கிற படத்தை இயக்கி வருகின்றார். இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 7ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. இந்நிலையில் ஹிந்தியில் ரேவதி கதையின் நாயகியாக நடித்துள்ள “ஆயே ஜிந்தகி” என்கிற படம் தற்போது வெளியாகியுள்ளது. இதனை அடுத்து உறுப்புகள் தானம் செய்வதை வலியுறுத்தும் விதமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் மருத்துவமனையில் எதிர்பாராமல் இறப்பவர்களின் உறுப்புகளை தானம் செய்ய வைப்பதற்காக அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அந்த குடும்பத்தாரிடம் பேசி சம்மதிக்க வைக்கும் ஒரு சவாலான கதாபாத்திரத்தில் ரேவதி நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தை அணிர்பன் போஸ் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப்படம் சமூக நோக்கத்துடன் உருவாகியுள்ளதாக கூறி இத்திரைப்படத்திற்கு தற்போது ராஜஸ்தான் அரசு முழு வரிவிலக்கு அளித்துள்ளது. இது படக்குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் சிலாதித்யா போரா கூறியதாவது. “ராஜஸ்தான் அரசுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளித்துள்ளதன் மூலம் இந்த படம் இன்னும் நிறைய மக்களால் பார்க்கப்படும். அதன்மூலம் உறுப்புகள் தானம் பற்றிய விழிப்புணர்வும், ஆர்வமும் இன்னும் அதிக மக்களிடம் ஏற்பட ஒரு வாய்ப்பை ராஜஸ்தான் அரசு உருவாக்கி கொடுத்துள்ளது. இதனால் உரிய நேரத்தில் உறுப்புகள் தானம் கிடைக்காத நிலையில் மடியும் உயிர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என்பது உறுதி” என்று அவர் கூறியுள்ளார்.