தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் உதவும் உள்ளங்கள் என்ற தன்னார்வ அமைப்பு தீபாவளி பண்டிகையை ஆதரவற்ற குழந்தைகளுடன் ஆனந்த தீபாவளி என்ற பெயரில் கொண்டாடி வருகின்றது. அவ்வகையில் 25வது ஆண்டாக நேற்று நடைபெற்ற ஆனந்த தீபாவளி திருவிழாவில் ஆதரவற்ற குழந்தைகள் அதிக அளவில் கலந்து கொண்டு தீபாவளியை கொண்டாடினர். அதில் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி, வாணி போஜன்,அஸ்வின் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு ஆதரவற்ற குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.
ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடும் வாய்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும் இது போன்ற குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடுவது நமது கடமை எனவும் கிருத்திகா உதயநிதி கூறினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் நீங்கள் போட்டியிடுவதற்கான வாய்ப்பு உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது.
இதைக் கேட்ட உடன் கிருத்திகா உதயநிதி சிரித்துக்கொண்டே,இது குறித்து எல்லாம் நான் எப்பவும் யோசித்தது கிடையாது, இப்படி எல்லாம் கேட்டால் என்னிடம் பதில் இருக்காது என அவர் கூறினார். ஏற்கனவே ஸ்டாலின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக அரசியலில் கால் பதித்து திமுகவை ஆக்கிரமித்து உள்ளதாக பல விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது கிருத்திகா உதயநிதி அளித்துள்ள பேட்டியால் திமுக தலைமை மட்டுமல்லாமல் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளன.