கரடி தாக்கியதால் பெண் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இஞ்சிப்பாறை எஸ்டேட் மேல் பிரிவு பழைய பாடி பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சபிதா குமாரி(19) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நேற்று சபிதாகுமாரி அதிகாலை நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த போது தேயிலை தோட்டத்தில் குட்டியுடன் பதுங்கி இருந்த கரடி திடீரென அவரை நோக்கி ஓடி சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சபிதா குமாரி கூச்சலிட்டவாறு வீட்டை நோக்கி ஓடியும், கரடி விடாமல் அவரை துரத்தி கடித்தது.
இதனை அடுத்து சபிதா குமாரியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பிரகாஷ் மற்றும் அக்கம் பக்கத்தினர் கரடியை விரட்டி சபிதாகுமாரியை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அறிந்த மானாம்பள்ளி வனத்துறையினர் சபிதா குமாரியை நேரில் சென்று பார்வையிட்டு நிவாரண தொகையான ஐந்தாயிரம் ரூபாயை வழங்கியுள்ளார். அட்டகாசம் செய்யும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.