கடலூர் மாவட்டத்தில் உள்ள பில்லாலிதொட்டி பகுதியில் வசிக்கும் 34 வயதுடைய பெண் பண்ருட்டி ராசாபாளையத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து அந்த பெண் வீட்டிற்கு செல்வதற்காக அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் பெண்ணிடம் நைசாக பேச்சு கொடுத்து உங்களை ஊரில் இறக்கி விடுகிறேன் எனக் கூறியுள்ளார். இதனை நம்பி அந்த பெண்ணும் மோட்டார் சைக்கிளில் ஏறியுள்ளார். இவர்கள் வாழப்பட்டு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த நபர் மோட்டார் சைக்கிளை கரும்பு தோட்டத்திற்குள் திருப்பியதால் அதிர்ச்சி அடைந்த பெண் சத்தம் போட்டுள்ளார்.
அப்போது கரும்பு தோட்டத்தில் நின்று கொண்டிருந்த 2 பேரும், அழைத்து சென்ற வாலிபரும் இணைந்து அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று அதனை செல்போனில் படம் பிடித்தனர். அந்த பெண்ணின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்ததால் மூன்று பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரியின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராசாபாளையம் பகுதியில் வசிக்கும் விக்கி, வேலு உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.