மொழி எல்லைகளைக் கடந்து மற்றுமொரு ரூபாய்.100 கோடி வசூல் திரைப்படமாக கன்னடப் படம் “காந்தாரா” சாதனை புரிந்துவருகிறது. கேஜிஎப் 1, 2 திரைப்படங்களுக்குப் பின் கன்னட திரையுலகில் ரூபாய்.100 கோடி வசூலைக் கடந்துள்ள 3வது படம் இது. இந்த படத்தில் லீலா எனும் கதாபாத்திரத்தில் கன்னட நடிகையான சப்தமி கவுடா நடித்து இருக்கிறார். தற்போது படத்தில் அவரது கதாபாத்திரமும், நடிப்பும் விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது. அத்துடன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்காக இயக்குனரும், நடிகருமான ரிஷாப் ஷெட்டிக்கு நன்றி என சப்தமி கவுடா தெரிவித்து இருக்கிறார்.
மேலும் அவர் கூறியதாவது, இப்படத்திற்காக என்னை முதலில் தொடர்புகொண்டபோது இந்த கதாபாத்திரம் திரையில் எப்படி இருக்கும். மேலும் படத்தின் பெயர் குறித்து கூட எனக்கு எந்த ஐடியாவும் இன்றி இருந்தது. ஆனால் திறமைவாய்ந்த ரிஷாப் சாரும், அவருடைய குழுவினரும் இப்படத்தில் நான் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும், ஆர்வத்தையும் எனக்குள் ஏற்படுத்தினர். முதல்முறை ஸ்கிரிப்ட்டை படித்தபோது, நடிப்புப் பயிற்சியின்போது, லீலா கதாபாத்திரம் எப்போதும் எனக்கு சிறப்பான ஒன்றாக அமையும் எனத் தோன்றியது.
அந்த கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுக்கும் வாய்ப்பானது எனக்குக் கிடைத்ததற்கு நான் கொடுத்து வைத்திருக்கவேண்டும். இந்த வாய்ப்பைத் தந்ததற்கும், லீலா கதாபாத்திரத்தில் நடிக்க என்னைத் தேர்வுசெய்ததற்கும் மிக்க நன்றி சார். நீங்கள் எந்த அளவுக்கு கற்பனை செய்து வைத்திருந்தீர்களோ, அந்த அளவிற்கு நான் லீலா கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்துள்ளேன் என நம்புகிறேன். இதனிடையில் லீலாவுக்கு சிவாவாக இருந்ததற்கு நன்றி. இன்னும் பல பிளாக்பஸ்டர் கொடுக்க வாழ்த்துகள் சார். இன்னும் மகத்தான வெற்றிகளைப் பெறுவதற்கு இப்படம் ஆரம்பமாக இருக்கட்டும்” என தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.