வேலூர் அருகே தங்கச் செயினை பறித்துச் சென்ற 2 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை அடுத்த கேவிகுப்பம் பேருந்து நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக வழிப்பறி சம்பவம் அதிகமாக நடைபெற்று வருவதாக வந்த புகார்களை தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியிலும் விசாரணையிலும் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் குடியாத்தம் சித்தூர் கேட் அருகே முதியவர் ஒருவர் மாடு வாங்குவதற்காக ரூபாய் 48,000 பணத்துடன் பேருந்துக்காக காத்து நின்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரிடமிருந்து பணப்பையை பறித்து சென்றுள்ளனர். இதையடுத்து சிசிடிவி கேமரா மூலம் மர்ம நபர்களை கண்டறிந்து தனிப்படை அதிகாரிகள் அவர்கள் அணைக்கட்டு தாலுகா வழுதலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்தவுடன் அங்கு விரைந்து 2 நபர்களை கைது செய்தனர்.
பின் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், ஜனவரி 28, பிப்ரவரி 12, பிப்ரவரி 18 ஆகிய தேதிகளில் தனித்தனி பெண்களிடம் சுமார் 12 பவுன் தங்க நகையை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். பின் அவர்களிடமிருந்து 12 பவுன் தங்க நகையையும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.