ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதற்கு பல புராணக் கதைகள் உள்ளன.தீபாவளி என்பது குழந்தைகள் அனைவரும் மிகவும் விருப்பமாக கொண்டாட கூடிய பண்டிகையாகும். அன்றைய நாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து சந்தோசமாக கொண்டாடுவார்கள். இன்னும் சொல்லப் போனால் வீட்டில் உற்றார் உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி இந்த நன்னாளை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். தீபாவளி பண்டிகை தமிழ் மாத கணக்கீட்டின்படி பெரும்பாலான வருடங்களில் ஐப்பசி மாதம் அமாவாசை நாளில் தான் கொண்டாடப்படும்.
ஒரு சில வருடங்களில் அம்மாவாசைக்கு முந்தைய தினம் கொண்டாடப்படும்.ஆங்கில நாள்காட்டியின் படி அக்டோபர் 17 முதல் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் தீபாவளி பண்டிகை ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது. இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகளிலும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகின்றது.இந்துக்கள் மட்டுமல்லாமல் சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் போன்றவர்களும் இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள். அதே சமயம் இந்தியாவில் தீபாவளி பண்டிகை ராமனோடு தொடர்புடையது என கூறப்படுகிறது .
ராமன் தனது 14 வருட வனவாசத்தை முடித்துக் கொண்டு லட்சுமணன் மற்றும் சீதாவுடன் அயோத்திக்கு திரும்பிய தினத்தை தான் அந்த நாட்டு மக்கள் விளக்கேற்றி கொண்டாடியதாகவும் அதுவே தீபாவளி நாள் எனவும் புராண வரலாறு கூறுகிறது.மற்றொரு கதையில் பெரும் அட்டகாசம் செய்த நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்த போது தான் இறந்த தினத்தை மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என அசுரன் கேட்டுக் கொண்டதால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.
ஆனால் பண்டித அயோத்திதாசர் தீபாவளி பண்டிகை பௌத்த பண்டிகை, அதனை பிராமணர்கள் திருடி கொண்டார்கள் என்கின்றார்.இது தொடர்பாக அவர் எழுதிய ஒரு கட்டுரையில் தீபாவளி பண்டிகையை ஒரு பௌத்த பண்டிகை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பண்டிகையின் உண்மை காரணத்தை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் தான் புதிதாக கற்பித்துக் கொண்ட கதையை தான் நரகாசுரன் கதை என சீனி வெங்கடசாமி கூறுகின்றார்.
இருந்தாலும் இவையெல்லாம் தீபாவளிக்கு பின்னணி குறித்த கதைகளை தவிர அவை கொண்டாடப்பட்டது குறித்த ஆவணங்கள் எதுவும் கிடையாது. பின்னணியில் பார்க்கும்போது தமிழில் தீபாவளி குறித்த பதிவுகள் மிக குறைவாகவே உள்ளன.தமிழ் வரலாற்றில் மற்றும் இலக்கியங்களில் 19 ஆம் நூற்றாண்டு வரை தீபாவளி என்ற சொல் எதுவும் கிடையாது. 1842 ஆம் ஆண்டு இலங்கையில் வெளியிடப்பட்ட மணி பாய் தமிழ் என்ற தமிழ் அகராதியில் இந்த சொல் உள்ளது. அதற்குப் புராண விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.எனவே அந்த தருணத்தில் இந்த விழா அறிமுகமாகி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
தீபாவளி என்ற வார்த்தைக்கு ஒரு அர்த்தம் உள்ளது. அதாவது தீபம் என்றால் விளக்கு, ஆவளி என்றால் வரிசை என்று அர்த்தம்.அதாவது விளக்குகளை வரிசையாக ஏற்றி ஒளியினால் கடவுளை வழிபடும் அந்த புண்ணிய நாளினை தான் தீபாவளி என கூறுகிறோம். எந்த ஒரு புராண வரலாறும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் வருடம் தோறும் தீபாவளி பண்டிகை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.
அன்றைய நாளில் அனைவரும் எண்ணெய் தேய்த்து குளிப்பதை புனித நீராடல் என கூறுகிறோம். பல பண்டிகைகள் வருடம் முழுவதும் வந்தாலும் தீபாவளி என்ற பண்டிகைக்கு தனி சிறப்பு உள்ளது. இந்த நாளில் ஏழை மற்றும் பணக்காரர் என்ற பாகுபாடு எதுவும் இல்லாமல் அனைவரும் உத்தாடை அணிந்து வீட்டில் தீபம் ஏற்றி தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள்.