இந்தியாவில் வருடம் தோறும் தீபாவளி பண்டிகையானது சிறப்பாக கொண்டாடப்படும். நரகாசுரன் என்ற அரக்கனை கிருஷ்ணன் வதம் செய்த நாள்தான் தென்னிந்தியாவில் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையின் போது தென்னிந்தியாவில் புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து மக்கள் பண்டிகையை கொண்டாடுவார்கள். அதன் பிறகு தீபாவளி என்பது தீப ஒளி என்ற இன்னொரு பொருளும் தருவதால் பண்டிகையின் போது வாழ்வின் இருள் விலகி வெளிச்சம் பிறக்கும் என்று ஒரு ஐதீகம் இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் தீபாவளி பண்டிகையின் போது விளக்குகளை ஏற்றுகிறார்கள். இந்நிலையில் தீபாவளி பண்டிகையின் போது சூரிய உதயத்திற்கு முன்பாக அதிகாலையிலேயே அனைவரும் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து சுடுதண்ணீரில் குளிக்க வேண்டும்.
இந்த தீபாவளி நன்னாளின் போது அதிகாலை நேரத்தில் சூரிய உதயத்திற்கு முன்பாக நல்லெண்ணெய் தேய்த்து சுடுதண்ணீரில் குளித்தால் கங்கா நதியில் நீராடியதற்கு சமம் என்று கூறப்படுகிறது. இந்த பெரும் பாக்கியத்தை அடைவதற்காக தான் தீபாவளி நன்னாளில் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கிறார்கள். அதிகாலையில் நீராடிய பிறகு பொதுமக்கள் தாங்கள் வாங்கி வைத்திருக்கும் புத்தாடைகளை அணிவித்து வீட்டில் விளக்கேற்றி செய்து வைத்திருக்கும் பலகாரங்களை சுவாமிக்கு படையல் போட்டு பூஜை செய்து வழிபடுவார்கள்.
தீபாவளி பண்டிகையின் போது குறிப்பாக பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் உளுந்து மற்றும் பருப்பு வடை, சுசியம், அதிரசம், முந்திரி கொத்து, முறுக்கு வகைகள், பஜ்ஜி, தட்டை, சீடை மற்றும் மைசூர் பாக் போன்ற பல்வேறு வகையான பலகாரங்களை செய்வார்கள். இந்நிலையில் தீபாவளி பண்டிகையின் போது அதிகாலையில் நீராடி, சாமி தரிசனம் செய்த பிறகு வீட்டில் செய்து வைத்திருக்கும் பலகாரங்களை விரும்பி சாப்பிடுவோம். இதைத்தொடர்ந்து பட்டாசுகளை வெடிக்க ஆரம்பித்து விடுவார்கள். நரகாசுரனை வதம் செய்ததை கொண்டாடும் விதமாகத்தான் நாம் பட்டாசுகளை வெடிக்கிறோம்.
மேலும் தீபாவளி பண்டிகையின் போது அதிகாலை 3 மணி முதல் 5.30 மணிக்குள் நாம் நாம் நீராடி விடுவதுடன், கிருஷ்ணர், மகாலட்சுமி மற்றும் குபேரர் படங்களை வீட்டில் வைத்து 3 வாழை இலைகளை போட்டு வீட்டில் செய்து வைத்திருக்கும் பலகாரங்கள் மற்றும் பண்ட வகைகளை படையலாக படைக்க வேண்டும். பூஜை செய்யும் போது வாங்கி வைத்திருக்கும் புத்தாடைகளையும் பூஜையில் வைத்து அதற்கு சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். இதைத்தொடர்ந்து பூஜை முடிவடைந்த பிறகு நாம் பூஜையில் வைத்த புத்தாடைகளை எடுத்து அணிவித்து விட்டு வீட்டில் உள்ள பெரியவர்களிடம் காலில் விழுந்து ஆசி பெற்று நம்முடைய அக்கம் பக்கத்தினருக்கு இனிப்புகளை பரிமாறி தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது மிகவும் சிறப்பு.