தீபாவளி பண்டிகை வருகிற 24-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
குஜராத், மராட்டியம் போன்ற மாநிலங்களில் தீபாவளியை “தன திரியோதசி”, “தண்டராஸ்” என அழைக்கின்றனர். நேபாளத்தில் ” காக் திஹார்” என்ற பெயரில் தீபாவளி அன்று காகங்களுக்கு உணவளித்து கொண்டாடுகின்றனர். பொதுவாக வடநாட்டில் தீபாவளியை “நரக சதுர்த்தி” என அழைப்பது வழக்கம். அடுத்த நாள் அம்மாவாசை தினத்தில் வடநாட்டினர் தீபாவளியை கொண்டாடுகின்றனர். இந்த நாளை ” சோட்டி தீபாவளி” என அழைப்பதுண்டு. தீபாவளி நாளில் எண்ணை தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து மகிழ்வர். நேபாளத்தில் வசிக்கும் மக்கள் “குகுர் திஹார்” என்ற பெயரில் தீபாவளி நாளில் நாய்களுக்கு உணவிட்டு வழிபடுகின்றனர்.
மலையாளிகள், தமிழர், கன்னடத்தைச் சேர்ந்தவர்கள் “இலக்குமி பூஜை” என பொதுவாக சொல்லப்படும் தீபாவளி நாளில் பட்டாசுகள் வெடித்து லட்சுமி பூஜை செய்து கொண்டாடுகின்றனர். நேபாளத்தில் வசிப்பவர்கள் இலக்குமி பூஜையுடன், கோமாதா பூஜையையும் சேர்த்து செய்து வழிபடுகின்றனர்.
உத்திரபிரதேச மாநிலத்தில் தீபாவளி தினத்தில் “கோவர்த்தன பூஜை” செய்து கண்ணனை வழிபட்டு அன்னக்கூடம் என்ற பெயரில் பல வகை உணவு சமைத்து வழிபடுகின்றனர்.
ஒடியா, பீகார், அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் தீபாவளி காளி பூஜையாக கொண்டாடப்படுகிறது. தேய்பிறை 14-ம் நாளை அவர்கள் “காளி சதுர்த்தி” என கொண்டாடுவதுடன் அமாவாசை அன்று “சியாமா பூஜை” என்ற பெயரில் காளியை வணங்குகின்றனர்.