Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#WIvSCO : நேற்று SL…. இன்று WI…. 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி…. விண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்காட்லாந்து..!!

உலகக்கோப்பை தகுதி சுற்றுப்போட்டியில் விண்டீசை 42 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்காட்லாந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தகுதிச் சுற்றின் 3ஆவது போட்டியில் இன்று (அக்டோபர் 17ஆம் தேதி) இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு ஹோபார்ட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி –  ஸ்காட்லாந்து அணிகள் மோதியது. கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் 3 வெற்றிகளுடன் சூப்பர் 12 சுற்றுக்கு ஸ்காட்லாந்து தகுதி பெற்றது. அதேபோல  இரண்டு முறை டி20 உலகக்கோப்பையை வென்ற மேற்கிந்திய தீவுகள் இந்த ஆண்டு சூப்பர் 12ல் இடம்பெறாமல் தகுதிச் சுற்றில் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி ஸ்காட்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜார்ஜ் முன்சி மற்றும் மைக்கேல் ஜோன்ஸ் களமிறங்கி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அதன்பின் ஜோன்ஸ் 20 ரன்களில் ஆட்டமிழக்க, அதனைத் தொடர்ந்து வந்த மேத்யூ கிராஸ் 3, ரிச்சி பெரிங்டன் 16 ரன்கள் என சீரான இடைவெளியில் அவுட் ஆனதால் ரன்ரேட் குறைந்தது.

அதன் பின் ஜார்ஜ் முன்சி மற்றும் கலம் மேக்லியோட் இருவரும் ஜோடி சேர்ந்து சிறிது நேரம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதையடுத்து கலம் மேக்லியோட் 23, மைக்கேல் லீஸ்க் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இருப்பினும் துவக்க வீரர் ஜார்ஜ் முன்சி அரைசதம் அடித்ததால் 20 ஓவர் முடிவில் ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட் இழந்து 160 ரன்கள் குவித்தது. ஜார்ஜ் முன்சி 53 பந்துகளில் 9 பவுண்டரி உட்பட 66 ரன்களுடனும், கிறிஸ் க்ரீவ்ஸ் 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் அல்சாரி ஜோசப் மற்றும் ஜேசன் ஹோல்டர் இருவரும் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களான கைல் மேயர்ஸ் மற்றும் எவின் லூயிஸ் இருவரும் களமிறங்கினர். கைல் மேயர்ஸ் அதிரடியாக தொடங்கிய நிலையில் 20 (13) ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து எவின் லூயிஸ் 14, பிராண்டன் கிங் 17, கேப்டன் நிக்கோலஸ் பூரன் 5, ஷர்மர் புரூக்ஸ்  4, ரோவ்மன் பவல் 5, என யாருமே பெரிதாக ரன்கள் எடுக்காமல் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியே சென்றனர்.

அதிகபட்சமாக 33 பந்துகளில் 38 ரன்கள் அடித்திருந்த ஜேசன் ஹோல்டர் கடைசியில் 19 ஆவது ஓவரில் ஆட்டம் இழந்தார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 18.3 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதனால் யாரும் எதிர்பார்க்காத ஸ்காட்லாந்து அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் தகுதி சுற்றில் விண்டீசை வீழ்த்தியுள்ளது. ஸ்காட்லாந்து அணியில் அதிகபட்சமாக மார்க் வாட் 3 விக்கெட்டுகளும், பிராட் வீல் மற்றும் மைக்கேல் லீஸ்க் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

நேற்று நடந்த முதல் தகுதி சுற்று போட்டியில் கத்துக்குட்டி அணியான நமீபியா இலங்கையை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த நிலையில், தற்போது இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியை ஸ்காட்லாந்து வீழ்த்தியிருப்பதை உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

Categories

Tech |