ஆண்டிப்பட்டி அருகே தொடர் மழை எதிரொளியால் வெள்ள நீர் கிராமத்தை சூழ்ந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சென்ற சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. நாச்சியார் புறத்திலும் கனத்த மழை பெய்தது. இதனால் கிராமத்தில் ஆங்காங்கே பல இடங்களில் மழை நீர் குட்டை போல் தேங்கி நிற்கின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆண்டிபட்டி, நாச்சியார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் கனமழை பெய்ததன் காரணமாக சாலைகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடியது.
இதில் நாச்சியார் புறத்திற்கு செல்லும் சாலையில் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு மழை நீர் வெள்ளமாக சூழ்ந்தது. இதனால் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சாலையில் மூன்று அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதால் கிராம மக்கள் அவ்வழியாக செல்ல முடியாமல் தவித்தார்கள். மேலும் நாச்சியார் புறத்திற்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். ஆகையால் வெள்ள நீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.