சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை 12 மாவட்ட பொதுமக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது. பருவமழை காலங்களின் போது கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படும். தற்போது கர்நாடக மாநிலம் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. அதன் பிறகு கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்தும் மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் காவிரி நதிக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் ஒகேனக்கல் அருவிக்கு வினாடிக்கு 1.85 லட்சம் கன அடி தண்ணீர் வருகிறது. இதன் காரணமாக அருவியில் குளிப்பதற்கும், பரிசல் இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1.95 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் நீர்மின் நிலையம் வழியாக 21,500 கன அடி தண்ணீரும், 16 கண் மதகுகள் வழியாக 1,73,500 கன அடி தண்ணீரும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் காவிரி கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதோடு, நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தொடர்ந்து அணையின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.