விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதியில் அதிமுக கட்சியின் பொன்விழா மற்றும் 51-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன்பிறகு பொதுக்குழு கூட்டத்தின் போது மழை பெய்தது. அந்த மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமானவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியன் பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக கட்சி மட்டும் தான் அனைத்து சமூகத்தினரையும் ஒன்றாக பார்க்கும். ஆனால் திமுக அப்படி கிடையாது.
திமுக ஆட்சியில் மின்வெட்டு அதிகரிப்பதால் தான் திமுகவும் மின்வெட்டும் ஒன்று என்று கூறி அனைவரும் கிண்டல் செய்கிறார்கள். திமுக பொதுக்குழு கூட்டத்தின் போது அமைச்சர்கள் செய்ததை பார்த்து என் உடம்பு ஒரு மாதிரி ஆகிவிட்டது என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். திமுக அமைச்சர்கள் தமிழக மக்களை இழிவு படுத்தி பேசுகிறார்கள். மானம் ரோஷம் இருந்தால் ஒரு அமைச்சரை தூக்கி வெளியே அனுப்ப முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். இதனையடுத்து அதிமுக கட்சியில் ஒரு அடிமட்ட தொண்டன் கூட பெரிய பதவிக்கு வர முடியும். ஆனால் திமுகவை பொறுத்தவரை ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, ராஜா என குடும்ப அரசியல் தான் நடந்து கொண்டிருக்கிறது.
திமுகவை கட்சியை பொறுத்த வரை கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் மட்டும் தான். எடப்பாடி பழனிச்சாமி இன்னும் 2 மாதத்தில் நிரந்தர பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார். இந்த 16 மாத கால திமுக ஆட்சியின் மீது பொதுமக்களுக்கு மிகுந்த வெறுப்பு ஏற்பட்டுள்ளது. எனவேதான் கண்டா வரச் சொல்லுங்க, எடப்பாடியை கண்டா வரச் சொல்லுங்க என்று பாடும் அளவிற்கு திமுகவின் ஆட்சி மாறி இருக்கிறது. அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலோடு கண்டிப்பாக சட்டமன்றத் தேர்தலும் நடைபெற வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்.
மேலும் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வருவதற்கு வாய்ப்பு இருக்கும் என சமீபத்தில் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கூறிய நிலையில், தற்போது மாஃபா பாண்டியராஜனும் கூறியுள்ளார். இதனால் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.