செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கோவையில் நடந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு நிகழ்வு. இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இதில் பன்னாட்டு பயங்கரவாத அமைப்புகள் தொடர்பு இருப்பதாக காவல்துறை கருதுகிறது. அதன் அடிப்படையில் சிலரை கைது செய்திருக்கிறது.
தமிழக காவல்துறையின் நடவடிக்கையை, தமிழக முதல்வரின் நடவடிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்று, பாராட்டுகிறது. யாராக இருந்தாலும், எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் மதத்தின் பெயரால் பயங்கரவாதத்தை கையில் எடுப்பது ஏற்புடையதல்ல. அதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
அதற்குரிய நடவடிக்கைகளை மைய – மாநில அரசுகள் மேற்கொள்ளும் வகையில் இன்றைக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு நன்கி இருக்கிறது. அந்த வகையில் வரவேற்கவும், பாராட்டவும் கடமைப்பட்டிருக்கிறோம். NIA விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. பாஜக வேறு என்ன கோரிக்கையை அவர்கள் வைத்து கடையடைப்பு நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. கடையடைப்பு மூலம் மேலும் பதற்றத்தை உருவாக்க அவர்கள் கருதுகிறார்களோ, என்று ஐயம் எழுகிறது என தெரிவித்தார்.