வனத்துறையின் எதிர்ப்பு காரணமாக 41 வருடங்களாக மின்சார வசதி இன்றி சிரமப்படும் திருநெல்வேலி மாவட்டம் திருப்பணிபுரம் கிராமமக்களுக்கு மின்சார வசதியை செய்து கொடுக்க தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தை அடுத்த மலை கிராமமான திருப்பணிபுரத்தை சேர்ந்த வசந்தி உள்ளிட்ட கிராமமக்கள் சார்பாக மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் இருப்பதாவது, தங்களது கிராமத்திற்கு மின் இணைப்புக் கோரி சென்ற 1979 ஆம் வருடம் மின்சார வாரியத்திடம் மனு அளித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி குழாய் இணைப்பு வழங்கி அதன் வாயிலாக குடிநீர் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் வனத்துறை கட்டுப்பாடுகள் காரணமாக தாங்கள் விளைவித்த பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் இருப்பதாகவும் கூறியுள்ளனர். இம்மனு ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் முன் விசாரணைக்கு வந்தபோது, மின்சார வாரியம் அளித்த பதிலில் மின்சார இணைப்பு அளிக்கும் அடிப்படையில் 14 மின்கம்பங்கள் நடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அரசியல் சாசனம் படி மக்களுக்கான அடிப்படை தேவையான மின்சாரம், குடிநீர் போன்றவற்றை வழங்குவது அரசின் பொறுப்பு என சொல்லிய மனித உரிமை ஆணையம், இதற்காக அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது. அதுமட்டுமின்றி மின்சார வசதிக் கோரி 25 குடும்பத்தை சேர்ந்தவர்களும் தனித் தனியாக விண்ணப்பிக்கவும், அதை பரிசீலித்து மின் இணைப்பு வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. மேலும் குடிநீர் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. அந்த பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கையில் தலையிட கூடாதென வனத்துறைக்கு உத்தரவிட்ட மனித உரிமை ஆணையம், இந்த உத்தரவுகள் செயல்படுத்தப்படுவதை அரசு கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.