Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆறுமுகசாமி அறிக்கை : அதிமுகவில் நடக்கப்போவது என்ன? பரபரப்பு தகவல் ..!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பாக விமர்சகர் சுமந்த் சி ராமன் கூறுகையில், இந்த அறிக்கையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக எந்த வெளிச்சமும் வரவில்லையே. மேலும் ஒரு விசாரணை செய்யப்பட வேண்டும் என தான் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை செய்வதற்காக தான் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது.

எதற்காக அமைத்தார்கள் இந்த குழுவை ?என்ன நடந்தது ? யார் என்ன தவறு செய்தார் ? என்ன தவறுகள் செய்யப்பட்டுள்ளன ?  சிகிச்சையில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளனவா ? யாரெல்லாம் உடன் இருந்தார்கள் ?  உண்மையில் மரணம் நிகழ்வதற்கான காரணம் என்ன என்பது குறித்து தான் இவர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். யார் என்ன தவறு செய்தார்கள் என்று அறிக்கை எதுவும் கூறவில்லை.

சசிகலா, டாக்டர் கே எஸ் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தான் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் முதலாவதாக சசிகலாவை தான் விசாரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில்,  இதுவரை சசிகலாவிடம் எந்த ஒரு விசாரணையும் நடைபெறவில்லை.

சசிகலா கூறியதை அப்படியே அறிக்கையாக எடுத்துக் கொண்டீர்கள். எனவே எந்த விதத்தில் சசிகலா மீது சந்தேகத்தை எழுப்ப முடியும். சசிகலாவை இதுவரை ஆணையத்திற்கு அழைக்கவே இல்லை. அவரிடம் எந்த விசாரணையும் நடத்தவில்லை. இப்படி இருக்கும் போது அவர் மீது சந்தேகம் இருக்கிறது, அவரை விசாரிக்க வேண்டும் என கூறுவது எந்த விதத்தில் நியாயம்.

இந்த விசாரணை அறிக்கை திட்டவட்டமான முடிவுகளை கொடுத்திருக்க வேண்டும். மேற்கொண்டு அரசு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருப்பது நியாயம் இல்லாதது. என்ன குற்றம் செய்தார்கள் ? எதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ? என முழுமையாக இந்த அறிக்கையில் தெரிவித்து இருக்க வேண்டும். அப்படி எதையும் வெளிப்படையாக கூறாமல், மொட்டையாக நான்கு பேர் மீது விசாரணை நடத்த வேண்டும் என கூறி இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

சந்தேகத்திற்குரிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சந்தேகத்தை தீர்க்க தான் விசாரணை குழு அமைக்கப்பட்டது. ஆனால் இப்போது எங்களுக்கு சந்தேகம் உள்ளது. அறிக்கையில் முரண்பாடு உள்ளது என்பது எல்லாருக்கும் தெரிந்தது.

ஜெயலலிதா சிகிச்சையில் தவறுகள் ஏதாவது செய்தார்களா ? அல்லது ஏதாவது தவறு நடந்ததா ? அத்தகைய விஷயங்களை தான் சந்தேகத்தின் மூலம் விசாரணைக்கு எடுக்க வேண்டுமே தவிர, இவர்கள் மீது விசாரணை நடத்துங்கள் என கூறுவது எப்படி எடுத்துக் கொள்வது ?

அதிமுகவில் நடந்து கொண்டு இருக்க கூடிய இந்த பிரச்சனைகளுக்கு, இதில் எந்த சந்தேகமும் இல்லை, ஜெயலலிதா மரணம் இயற்கை மரணம் தான், யாரும் ஒன்னும் தப்பு செய்யவில்லை. முரண்பாடான செய்திகளை பொதுமக்களுக்கு கொடுத்தாங்க. ஆனால், இதை தவிர வேறு ஏதும் இல்ல என அறிக்கையில் வந்து இருந்தால், அதிமுகவுக்கு ஒரு நிம்மதியாக இருந்து இருக்கும். அது இல்லாமல் இருப்பதால் இன்னும் கொஞ்ச நாள் ஜெயலலிதா மர்ம மரணம், விசாரணை என நீட்டிக்கொண்டே செல்லலாம்.

இப்பவே நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் எத்தனை வருடங்கள் இந்த விசாரணையை எடுத்துச் செல்வீர்கள். இன்னும் ஒரு ஐந்து வருடத்திற்கு இந்த விசாரணை போகுமா ? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |