யுஏஇ-க்கு எதிரான டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தகுதிச் சுற்றுப் போட்டி கடந்த 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நமீபியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இலங்கை அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதேபோல ஐக்கிய அரபு அமீரகம் தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியிடம் போராடி தோற்றது. இந்நிலையில் இன்று (அக்.,18) ஜீலாங்கில் நடைபெறும் 6-வது போட்டியில் யுஏஇ – இலங்கை அணிகள் விளையாடி வருகிறது . இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் முதலில் பந்துவீசுதாக முடிவு செய்தது. அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களான பதும் நிசாங்கா மற்றும் குசால் மெண்டிஸ் இருவரும் களமிறங்கினர். தொடக்கம் முதலே நிசாங்கா அதிரடியாக விளையாடினார். நல்ல தொடக்கம் கிடைத்த நிலையில், குசால் மெண்டிஸ் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த தனஞ்செய டி சில்வா தனது பங்கிற்கு 33 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இதையடுத்து வந்த பானுக ராஜபக்சே 5, அசலங்கா மற்றும் கேப்டன் தசுன் ஷானகா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.. அதேபோல வனிந்து ஹசரங்கா 2, கருணாரத்னே 8 என அடுத்தடுத்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த போதிலும் மறுமனையில் துவக்க வீரர் நிசாங்கா அரைசதம் கடந்து சிறப்பாக ஆடினார். அவர் 60 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்ஸர்கள் உட்பட 74 ரன்கள் எடுத்த நிலையில், கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார்.
இறுதியில் 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் குவித்தது. யுஏஇ அணியில் பழனியப்பன் மெய்யப்பன் அதிகபட்சமாக 3 விக்கட்டுகளும், ஜாகூர் கான் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். இதையடுத்து தற்போது யுஏ அணி பேட்டிங்கில் களமிறங்கி ஆடி வருகிறது. 10 ஓவரில் 36/6 என தோல்வியை நோக்கி ஆடி வருகிறது.