உலகம் முழுதும் உள்ள இந்துக்களால் தீபாவளி பண்டிகையானது சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையை இந்துக்கள் மட்டும் இன்றி சீக்கியர்கள் மற்றும் சமணர்கள் போன்றவர்களும் கொண்டாடுகிறார்கள். வருகிற 24-ஆம் தேதி தென்னிந்தியாவில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும். இதேபோன்று வட இந்தியாவில் அக்டோபர் 22-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை 5 நாள் பண்டிகையாக தீபாவளி கொண்டாடப்படும். இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையை எப்படி கொண்டாடலாம் என்பது குறித்த சில தகவல்களை பார்க்கலாம். அதாவது தீபாவளி பண்டிகையின் போது அனைவருமே முதலில் முக்கியத்துவம் கொடுப்பது புத்தாடைக்கு தான். பொதுவாக புத்தாடை எடுக்கும் போது முழு முதல் கடவுளான விநாயக பெருமானுக்கும் சேர்த்து ஒரு வஸ்திரம் எடுக்க வேண்டும்.
அதன்பிறகு வீட்டின் அருகில் உள்ள தெய்வங்களுக்கும் அதற்கு ஏற்றார் போன்று வஸ்திரங்களை எடுத்துக் கொள்ளலாம். நாம் தெய்வங்களுக்கு வஸ்திரங்கள் எடுத்து கொடுத்தால் பண்டிகையின் போது அனைத்து தெய்வங்களும் நம்முடன் இருப்பதாக கருதப்படும். அதன்பிறகு நம்முடைய வீட்டிற்கு வருபவர்கள் மற்றும் தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியாமல் மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்பவர்களுக்கு நம்மால் முடிந்த அளவுக்கு புத்தாடை, வெடிகள் மற்றும் இனிப்புகளை வாங்கி கொடுத்து தீபாவளி பண்டிகையை கொண்டாடலாம். நாம் ஏழை, எளிய மக்களுக்கு உதவுவதன் மூலம் நம்முடைய தலைமுறையினருக்கும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வளரும்.
இதனையடுத்து தீபாவளி பண்டிகையின் போது நாம் அதிகாலை 3 மணி முதல் 5.30 மணிக்குள் நல்லெண்ணெய் தேய்த்து சுடு தண்ணீரில் குளிக்க வேண்டும். தீபாவளி பண்டிகையின் போது சுடுதண்ணீரில் கங்காதேவி வாசம் செய்வாள் என்பது ஐதீகம். அதேபோன்று நல்லெண்ணையில் லட்சுமி தேவியும், சீயக்காய் போன்றவற்றில் தேவர்கள் போன்றவர்களும் வாசம் செய்வார்கள் என்பது ஐதீகம். இதனால்தான் லட்சுமிதேவி, கங்கா தேவி மற்றும் தேவர்களின் அருளை பெறுவதற்காக அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து சுடு தண்ணீரில் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். நாம் கங்கா ஸ்நானம் செய்த பிறகு வீட்டில் வாங்கி வைத்திருக்கும் புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் போன்றவற்றை வீட்டில் விளக்கேற்றி அதற்கு முன்பு வைத்து வழிபட வேண்டும்.
இதனையடுத்து நம் வீட்டில் உள்ள பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி வாங்கிவிட்டு, புத்தாடைகளை அணிந்து இனிப்புகளை அக்கம் பக்கத்தில்இருப்பவர்களுக்கு பகிர்ந்து பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடலாம். மேலும் தீபாவளி பண்டிகைக்கு தீப ஒளி திருநாள் என்ற மற்றொரு பெயரும் இருப்பதால் நாம் மாலை நேரத்தில் வீட்டில் உள்ள விளக்குகளை அனைத்து வைத்து விட்டு விளக்கின் முன்பு 5 அகல் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபட வேண்டும். தீபத்தின் ஒளியில் இறைவனை காண்போம் என்ற தத்துவத்திற்கு ஏற்ப அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்டால் மிகவும் சிறப்பு. இதுதான் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கான வழிமுறைகள் ஆகும்.