பிரபலமான பாலிவுட் நடிகை மாணவ் நாயக். இவர் மராத்தி மொழி படங்களிலும் நடித்து வருவதோடு, ஹிந்தி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் நான் என்னுடைய வீட்டுக்கு இரவு நேரத்தில் ஒரு வாடகை காரில் மும்பையில் சென்று கொண்டிருந்தேன். அந்த கார் ஓட்டுநர் நான் சொல்ல சொல்ல கேட்காமல் போன் பேசிக்கொண்டே வண்டியை ஓட்டினார். அப்போது திடீரென ஒரு இடத்தில் சிக்னலை மீறியதால் போலீசார் வண்டியை நிறுத்தி புகைப்படம் எடுத்தனர். இதனால் கார் ஓட்டுனர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது நான் குறுக்கிட்டு புகைப்படம் எடுத்துவிட்டார்கள் இனி பேசி பயனில்லை இங்கிருந்து செல்லலாம் என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம். அப்போது கார் ஓட்டுநர் போலீசார் 500 ரூபாய் அபராதம் விதித்து விட்டார்கள். அதை நீங்கள் கொடுப்பீர்களா? என்று என்னிடம் கத்தினார். அதோடு பணத்தை கொடுக்க விட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் என்னை மிரட்டினார். இதனால் நான் காவல் நிலையத்திற்கு காரை விடுமாறு கூறினேன். ஆனால் அவர் வேறு பாதையாக காரை ஓட்டியதோடு, யாருடனோ போனில் பேசிக்கொண்டே இருந்தார்.
இதனால் நான் பயத்தில் காரை நிறுத்த சொல்லி கூச்சலிட்டேன். என்னுடைய அலறல் சத்தத்தை கேட்டு சாலையில் சென்று கொண்டிருந்த 2 மோட்டார் பைக்கும், ஒரு ஆட்டோ ரிக்ஷாவும் உடனடியாக காரை நிறுத்தி என்னை மீட்டனர். அதனால் நான் மிகவும் பயந்து போனேன். அந்த சம்பவத்தை நினைத்தாலே இப்போதும் உடம்பு நடுங்குகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து நான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால் போலீஸ் கமிஷனர் உத்தரவின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று பதிவிட்டுள்ளார்.