சென்னை உயர் நீதிமன்றத்தில் யானைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த 14-ஆம் தேதி காஞ்சிக்கோடு-வளையாறு இடையே ரயில் தண்டவாளத்தை கடப்பதற்கு யானை கூட்டம் முயற்சி செய்தபோது ரயில் மோதியதில் 2 பெண் யானைகள் பலியானதோடு ஒரு குட்டி யானை மாயமாகியுள்ளது என்றனர். இது சம்பந்தமாக தெற்கு ரயில்வே பாலக்காடு மண்டல பொது மேலாளர் நீதிமன்றத்தில் நவம்பர் 24-ம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
அதன்பிறகு யானைகளின் வழித்தடத்தில் ரயில்களின் வேகத்தை குறைக்க வேண்டும் என்று கூறப்பட்ட போது, அதில் சாத்தியம் கிடையாது என பாலக்காடு மண்டல பொறியாளர் அறிக்கை கொடுத்துள்ளார். இதில் அறிவியல் பூர்வமாக எதுவுமே இல்லை. எனவே யானைகள் வழித்தடத்தில் ரயிலின் வேகத்தை குறைப்பதற்கு ஒரு புதிய குழுவை நியமித்து அறிக்கை தயார் செய்ய வேண்டும். இந்த குழு அடுத்த ஒரு மாதத்தில் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறி நவம்பர் 24-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில் மற்றொரு வழக்கில் யானைகள் செல்லும் சாலைகளில் 24 மணி எச்சரிக்கை வாசகங்களை ஒளிபரப்பி கொண்டிருப்பதால் யானைகள் பாதைகளை கடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றது. எனவே ஒலிபெருக்கிகளை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக வேகத்தடைகளை அதிகரிக்க வேண்டும். மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போரூர் பகுதியில் யானைகள் வழித்தடத்தில் செயல்படும் செங்கல் சூளைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்து அதற்கான அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.