இந்தியாவில் மத்திய அரசின் மனிதவள அமைச்சகத்தின் கீழ் நாடு முழுதும் 1245 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 49 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகிறார்கள். அதன் பிறகு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சிபிஎஸ்- இ பாடத்திட்டங்கள் எடுக்கப்படுவதோடு குறைவான கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்த பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மட்டுமே பயிற்று மொழியாக இருக்கிறது.
அதோடு சமஸ்கிருத மொழியும் கற்பிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் குறித்த சில தகவல்கள் ஆர்டிஐ மூலமாக தற்போது பெறப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆர்டிஐ அறிக்கை வெளியான நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் அது வைரலாகி வருகிறது. அந்த ஆர்டிஐ அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தி படங்கள் கட்டாய பாடங்களாக இருக்கிறது.
தமிழ் பாடங்கள் 10-ம் வகுப்பு முதல் விருப்ப பாடங்களாக தேர்வு செய்து கொள்ளும் வசதி இருக்கிறது. ஆனால் 6 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விருப்ப பாடமாக கூட தேர்வு செய்யும் வசதி கிடையாது. அதோடு தமிழை ஒரு மொழிப்பாடமாக தேர்வு செய்ய முடியாது எனவும், சமஸ்கிருத மொழிக்கு பதிலாக தமிழ் மொழியை கொண்டுவர முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் 109 இந்தி மொழி ஆசிரியர்கள் மற்றும், 53 சமஸ்கிருத பாட ஆசிரியர்கள் இருக்கிறார்களே தவிர தமிழ் மொழி கற்பிப்பதற்காக ஒரு ஆசிரியர் கூட இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே 20 மாணவர்கள் விருப்பப்பட்டால் மட்டும்தான் தமிழ் பாடத்தை கற்பிக்க முடியும் என கேந்திரிய வித்யாலயா பள்ளியின் தரப்பில் கூறப்பட்டதற்கு சமூக ஆர்வலர்களும் அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழ் பாடம் விருப்பமானமாக இருப்பதை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியாது . கண்டிப்பாக அனைத்து மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.