தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் துணி, இனிப்பு, பட்டாசு உள்ளிட்ட பல வகையான பொருட்களை வாங்க கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர். எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடை விற்பனையாளர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திகைத்து வருகின்றனர். சென்னையில் தண்டையார்பேட்டை, டி.நகர், புரசைவாக்கம், பாடி, குரோம்பேட்டை ஆகிய பகுதியில் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதனை போல மதுரை, கோவை, திருச்சி போன்ற மாவட்டங்களிலும் கடைத்தோறும் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இந்த நேரத்தில் மகளின் பாதுகாப்பு கருதி கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்கள் மற்றும் முக்கிய சாலைகளில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவித சம்பவங்கள் தடுக்கக்கூடிய வகையில் இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதனை தொடர்ந்து தற்போது பண்டிகை கால விற்பனையை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் கடையை வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு அரசு இந்த வாரம் முழுவதும் 24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்க அனுமதி அளித்துள்ளது. அதனால் கடைகள் விற்பனைக்காக இரவு முழுவதும் திறந்து இருக்கும். இந்த நேரத்தில் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் கடை உரிமையாளர்களை எந்த விதத்திலும் தொந்தரவு அளிக்கக்கூடாது என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.