உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் அண்டார்க்டிகாவைத் தவிர்த்து பூமியின் 6 கண்டங்களிலும் பரவியிருக்கிறது.
சீனாவில் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மற்ற நாடுகளில் அதன் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. சீன அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக, கொரோனா வைரசின் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் கொண்டு வரப்படுகின்ற நிலையில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
சீனாவின் அண்டை நாடான தென்கொரியாவில் 1,261-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தென் கொரிய இராணுவ 20 வீரர்கள் 20 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல ஈரான் நாட்டில் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 139 ஆக இருக்கும் நிலையில் பலியானோர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் இத்தாலி நாட்டிலும் 400-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அந்நாடு அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை வேகமாக மேற்கொண்டு வருகிறது.
கொரோனா வைரஸ் ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் வட அமெரிக்க கண்டங்களில் மட்டுமே பரவியிருந்தது. ஆனால் தற்போது தென் அமெரிக்காவில் பிரேசில் நாட்டிலும், ஆப்பிரிக்காவில் அல்ஜீரியா மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகளிலும் பரவியிருக்கிறது கொரோனா. ஆனால் ஒரே ஒரு கண்டத்தில் மட்டும் பரவவில்லை. ஆம், அண்டார்க்டிக்கா தவிர கொரோனா 6 கண்டங்களிலும் பரவிய நோயாக பார்க்கப்படுகிறது.