தமிழக சட்டசபையில் அருணா ஜெகதீசன் அமைத்த ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை ஆணையம் குறித்த விவாதத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையம் மூலம் நிதி விசாரணை நடைபெற்று என்னிடத்தில் அது வழங்கப்பட்டது.
அது நேற்றைய தினம் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, அது தொடர்பாக விவாதம் நடைபெற நான் முன்மொழிந்தேன். அதை தொடர்ந்து இங்கே இருக்கக்கூடிய மாண்புமிகு உறுப்பினர் பெருமக்கள் திரு. வேல்முருகன், ஈஸ்வரன்,ஜவஹருல்லா, திரு.சதன் திருமலை குமார், திரு.ராமச்சந்திரன், திரு.சின்னதுரை, திரு. சிந்தனைச் செல்வன், திரு.கோ.கா மணி, திரு.செல்வப் பெருந்தகை ஆகியோர் தங்களுடைய கருத்துக்களை எல்லாம் அங்கே எடுத்து உரையாற்றியிருக்கிறீர்கள்.
எனவே இது குறித்து நான் அதிகம் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.நீங்கள் வழங்கி இருக்கக்கூடிய உங்களுடைய உரைகளை மட்டும் அல்லாமல், நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டு இருக்கக்கூடிய அந்த அறிக்கையில் மிக விளக்கமாக எல்லா செய்திகளும் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. அது குறித்து இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது ?
எப்படி எடுக்க வேண்டும் ? என்பதை அழுத்தம் திருத்தமாக நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள். மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே… கடந்த அதிமுக ஆட்சி காலத்திலேயே தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு ஆனது தமிழ்நாடு வரலாற்றில் மிகப்பெரிய கரும்புள்ளி. அதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. துயரமும் கொடூரமான அந்த சம்பவத்தை இன்று நினைத்தாலும் உடல் நடுங்குகிறது என தெரிவித்தார்.