அமெரிக்காவின் மில்வாக்கி நகரில் உள்ள மதுபான ஆலையில் புகுந்து ஒருவன் சரமாரியாக சுட்டதில் 6 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவம் அடிக்கடி நடந்து கொண்டு இருக்கிறது. இதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் அரசு கண்டு கொள்வதாக தெரியவில்லை. அங்கு அவ்வப்போது துப்பாக்கியால் உயிர்பலி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், அந்நாட்டின் மில்வாக்கி நகரில் இருக்கும் மதுபான ஆலையில் நடந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர்உயிரிழந்தனர்.
அந்நகரில் மால்சன் கூர் வளாகத்தில் நிமிடத்திற்கு ஆயிரக்கணக்கான பீர் பாட்டில்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அந்த வளாகத்தில் திடீரென உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர் சரமாரியாக கண் மூடி தனமாக சுட்டுத் தள்ளினான்.
இதில் 6 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்து பலியாகினர். அதேநேரம் அங்கிருந்த ஊழியர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் இமெயில் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின் நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பாக இருப்பதற்கு ஒரு அறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
விரைந்து வந்த போலீசார் துப்பாக்கியால் சுட்ட நபரை விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்தினர். மேலும் ஆம்புலன்சுகளும், தீயணைப்பு வாகனங்களும் அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டன. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.