திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான கந்த சஷ்டி திருவிழா வருகின்ற 25-ம் தேதி தொடங்க இருக்கின்றது. இந்த நிலையில் முருகன் கோவிலின் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது “கந்த சஷ்டி திருவிழா வருகின்ற 25ஆம் தேதி தொடங்க உள்ளது.
அந்த நாளில் மாலை 5.21 மணி முதல் 6.23 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கின்றது. இதனால் 25 ஆம் தேதி காலை 11:30 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெற உள்ளது. அதன் பின்பு திருவிழாவிற்காக காப்பு கட்டு நடைபெறும். இதனை அடுத்து 2.30 மணிக்கு மலைக்கோவில் மற்றும் உப கோவில்கள் நடைகள் அனைத்தும் சாத்தப்படும். எனவே பக்தர்களுக்கு நண்பகல் 12 அரை மணி முதல் படிப்பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் ஆகியவற்றின் மூலம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சூரிய கிரகணம் முடிந்த பின்பு மாலை 7 மணிக்கு மேல் பூஜை நடைபெறும். இந்த திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருப்பது வழக்கம். இவ்வாறு விரதத்தை கடைபிடிக்கும் பக்தர்கள் தங்குவதற்கு கோவில் சார்பாக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது கிழக்கு கிரிவிதி பழைய நாதஸ்வர கல்லூரி, சின்ன குமாரர் விடுதி ஆகிய இடங்களில் பக்தர்கள் கட்டணம் எதுவும் இன்றி தங்கி விரதத்தை கடைபிடிக்கலாம்” என அதில் கூறப்பட்டுள்ளது.