வாகனங்களை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் சிறு நாயக்கன்பட்டி பகுதியில் பபியோன்ராஜ்-செலின் ரோஸ் என்ற தம்பதி வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது “எனக்கு சொந்தமாக ஒரு டிராக்டரும் இரண்டு டிப்பர் லாரிகளும் இருக்கின்றன. இதனை கடந்த சில நாட்களுக்கு முன்பு மணப்பாறையைச் சேர்ந்த ஒருவருக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாடகைக்கு விட்டிருந்தேன்.
ஆனால் அவர் சரியான முறையில் வாடகை தரவில்லை. இதனால் அவரிடம் டிப்பர் லாரிகளையும் டிராக்டரையும் பார்க்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். ஆனால் அவர் அதனை வேறொரு நபரிடம் கொடுத்து விட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் அவர் வாகனங்களை வாடகைக்கு வாங்கி வேறொருவரிடம் விற்பனை செய்யும் மோசடிக்காரர் என்பதும் தெரியவந்துள்ளது. எனவே என்னுடைய இரண்டு டிப்பர் லாரிகளையும் டிராக்டரையும் உடனடியாக மீட்டு தருமாறும் வாடகை தராமல் மோசடி செயலில் ஈடுபட்ட அந்த நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.