கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக நகரே தண்ணீரில் தத்தளித்தது. இங்கு வெள்ள நீர் படிப்படியாக வடிந்து மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையில், நேற்று இரவு 8 மணி முதல் நள்ளிரவு வரை மழை வெளுத்து வாங்கியது. இதனால் பெங்களூருவில் உள்ள அனைத்து சாலைகளும் தண்ணீரின் மூழ்கியதோடு வாகனங்களும் சேதமடைந்துள்ளது.
இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் உள்ள கார் பார்க்கிங் இடங்கள் தண்ணீரில் மூழ்கியதோடு, மெஜஸ்டிக் அருகில் உள்ள சுற்றுசுவர் இடிந்து விழுந்ததில் ஏராளமான கார்கள் சேதம் அடைந்துள்ளது. இந்த மழையின் காரணமாக ஐடி நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் படி அறிவுறுத்தியுள்ளது.
அதன் பிறகு இயற்கை பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின் படி, விமான நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளில் 60 முதல் 80 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பெய்ததால், அடித்தளத்தில் உள்ள பல்வேறு கார் பார்க்கிங் மழை நீரில் மூழ்கியுள்ளது. இது ஒரு புறம் இருக்க மழை பாதிப்புக்கு காங்கிரஸ் மற்றும் பாஜக இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை சுமத்தி அரசியல் ரீதியாக சண்டை போட்டுக் கொள்கின்றனர்.
இதைத் தொடர்ந்து பெங்களூரு நகரில் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதோடு, வெள்ள நீர் வடியும் வரை ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளனர். மேலும் கடந்த 2017-ம் ஆண்டு இந்த பகுதியில் 1696 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவான நிலையில், நடப்பாண்டில் அதை முறியடித்து 1706 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பெய்துள்ள நிலையில், வரலாறு படைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறுகின்றார்கள்.