தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையை நேற்று முன்தினம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதிலிருந்தே அரசியல் அரங்கில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் சசிகலாவுக்கு எதிரான புகார்களை, அல்லது யூகங்களை சேகரித்த ஆணையம் சசிகலாவை நேரடியாக அழைத்து விசாரிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்புகின்றனர். சிறையில் இருந்த போது ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பிய நிலையில் தனது வழக்கறிஞர் மூலம் எழுத்து மூலமாகவே தான் விளக்கம் அளித்தார். சிறையிலிருந்து அவர் வெளியே வந்த பிறகு ஒன்றரை ஆண்டு காலம் ஆணையம் செயல்பட்டுக்கொண்டு தான் இருந்தது. அப்போது ஏன் விசாரிக்கவில்லை என்ற கேள்வியை பலரும் எழுப்புகின்றனர். ஒருவேளை சசிகலாவிடம் விசாரணை நடத்தி விளக்கத்தை பெற்றிருந்தால் ஆணையத்தின் பார்வை மாறியிருக்கலாம், அல்லது அடுத்தகட்டத்துக்கு விசாரணை நகர்ந்திருக்கும். குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் சசிகலாவிடம் ஆரம்பித்து சசிகலாவிடமே முடியும் படியாக இருக்கின்றன.
அதனைத்தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு இறுதியில் சசிகலாவுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு ஜெயலலிதா அவரை வீட்டிலிருந்து அனுப்பினார். அதன் பிறகு சில மாதங்கள் கழித்து 2012 ஆம் ஆண்டு அவரை சேர்த்துக் கொண்டார். அதிலிருந்து அவர்களுக்குள் சுமுக உறவு இல்லை என்பது போன்று அறிக்கை கூறுகிறது. அப்படியென்றால் சசிகலா சென்ற பின்னர் ஜெயலலிதா வீட்டிற்கு வந்தவர்கள் யார் யார்? அவருக்கு அந்த இடைப்பட்ட காலத்தில் வழங்கப்பட்ட சிகிச்சை என்ன? ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவருக்கு வழங்கப்பட்ட உணவு என்ன? அப்போது என்ன சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்பது குறித்து விசாரணையை கொண்டு சென்றிருக்கலாமே என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதனையடுத்து விசாரணை அறிக்கையால் சசிகலாவுக்கு என்னென்ன சிக்கல்கள் எழும் என சில சட்ட வல்லுநர்களிடம் கேட்கப்பது. அப்போது, சட்ட ரீதியாக இந்த விசாரணை அறிக்கை சசிகலாவுக்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பில்லை. விசாரணையில் எளிதாக இந்த குற்றச்சாட்டிலிருந்து வெளியே வரமுடியும். ஆனால் அரசியல் ரீதியாக சசிகலாவுக்கு எதிரான பிரச்சாரத்தை இதை வைத்து எளிதாக மேற்கொள்ளமுடியும் என்று கூறுகிறார்கள்.
ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து சில மாதங்கள் சசிகலாவை மையமாக வைத்து சில வதந்திகள் பரவியது. ஓபிஎஸ்ஸின் தர்மயுத்தத்தின் போது அது மேலும் வலுவடைந்தது. இதனை தொடர்ந்து சசிகலா சிறை சென்றார். அதிமுகவில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆர்கே நகர் இடைத் தேர்தலின் போது டிடிவி தினகரனின் ஆதரவாளராக இருந்த மறைந்த வெற்றிவேல் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டார். அதன் பின்னர் சசிகலா மீதான விமர்சனங்கள் குறைந்தன. அந்த இடைத் தேர்தலில் டிடிவி தினகரனும் அமோக வெற்றி பெற்றார். சிறையிலிருந்து மீண்ட பின்னர் ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சை சசிகலாவுக்கு எதிராக திரும்பவில்லை. தற்போது ஆணையத்தின் அறிக்கையால் மீண்டும் எழுந்துள்ளது. இது தொடர்பான விசாரணை முறையாக நடைபெற்றால் சசிகலாவுக்கு சிக்கல் வராது. அதேசமயம் சசிகலா போயஸ் கார்டனில் இல்லாத சமயத்திலும், பெங்களூர் சிறையிலும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை, உணவு குறித்து விசாரணையை நடத்த வேண்டும் அப்படி நடத்தினால் விசாரணையில் திருப்பங்கள் ஏற்படலாம். மற்றபடி தற்போது எழுந்துள்ள இந்த சசிகலாவுக்கு எதிரான விமர்சனம் இரண்டு மூன்று நாள்கள் ஊடகங்களிலும் சமூகவலைதளங்களிலும் பேசுபொருளாகி காணாமல் போய்விடும் என்கிறார்கள்.