Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NAMvUAE : 149 ரன்கள் இலக்கு….. யுஏஇயை வீழ்த்தி சூப்பர் 12க்குள் நுழையுமா நமீபியா?

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தகுதிச் சுற்றின் கடைசி போட்டியில் நமீபியாவுக்கு 149 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது யுஏஇ அணி..

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தகுதிச் சுற்றின் 10வது போட்டியில் இன்று நமீபியா மற்றும் யுஏஇ அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப்போட்டி ஜீலாங்கில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்குதொடங்கியது. இரு அணிகளுக்கும் இதுவே கடைசி தகுதிச் சுற்று ஆட்டமாகும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. எனவே யுஏஇ வெளியேறிவிட்டது. அதேநேரத்தில் நமீபியாவுக்கு இது முக்கிய போட்டி. இதில் வெல்லும்பட்சத்தில் சூப்பர் 12க்கு முன்னேறும்.

இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி யுஏஇ அணியின் தொடக்க வீரர்களாக முகமது வசீம் விருத்தியா அரவிந்த் இருவரும் களமிறங்கினர்.. இருவரும் மிக பொறுமையாக ஆடிவந்த நிலையில், 9ஆவது ஓவரில் அரவிந்த் 21 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்..

அதன் பின் முகமது வசீம் மற்றும் சிபி ரிஸ்வான் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இதில் சிபி ரிஸ்வான் பொறுப்பாக விளையாட மறுமுனையில் முகமது வசீம் (50) அரை சதம் அடித்து ஆட்டம் இழந்தார்.. அதன் பின் வந்த அலிஷான் ஷரபு 4 ரன்களில் வெளியேற, 15 ஓவரில் 97/2 என அணியின் ஸ்கோர் மிக குறைவாக இருந்தது..

கடைசியில் சி.பி ரிஸ்வான் மற்றும் பசில் ஹமீட் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். ஜேஜே ஸ்மிட் வீசிய கடைசி ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி என மொத்தம் 21 ரன்களை இருவரும் விளாசியதால் ஓரளவிற்கு சவாலான இலக்கை நிர்ணயித்தது. யுஏஇ 20 ஓவர்  முடிவில்3 விக்கெட் இழந்து 148 ரன்கள் குவித்தது. சிபி ரிஸ்வான் 29 பந்துகளில் (3 பவுண்டரி, 1 சிக்ஸர்) 43 ரன்களுடனும், பசில் ஹமீட் 14 பந்துகளில் (2 பவுண்டரி, 2 சிக்ஸர்) 25 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.. இதையடுத்து நமீபியா அணி 149 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடி வருகிறது.

Categories

Tech |