வேலூர் அருகே ஒடுக்கத்தூர் பகுதியில் மத்திய அரசு நலத்திட்டங்கள் ஒழுங்கான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா? என்று மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் யாவும் முறையாக நடக்கின்றனவா? என்பது குறித்து விசாரிக்க வேலூர் மாவட்ட ஆட்சியர் திடீரென ஒடுகத்தூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
அந்த வகையில் மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 432 வீடுகள் அப்பகுதிக்கு ஒதுக்கப்பட்டது. அதன்படி அனைத்து வீடுகளும் கட்டப்பட்டு விட்டதா என்பது குறித்து பேரூராட்சி அலுவலரிடம் கேட்டபின் கணக்கு வழக்குகளையும் சரி பார்த்தார். அப்போது பேரூராட்சி அலுவலர் 97 வீடுகள் பாக்கி உள்ளதாக தெரிவிக்க,
அவற்றை விரைந்து கட்டுமாறு அறிவுறுத்தினார். பின்பு ரூபாய் ஒரு கோடி மதிப்பில் சாலை மற்றும் மேம்பாலங்கள் வசதியை ஏற்படுத்தித் தரும் பணி குறித்து விசாரித்து அதனையும் விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.
மேலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என இந்த பகுதிகளில் பிரிக்கப்படுவதில்லை. ஏற்கனவே பலமுறை அறிவுறுத்திவிட்டோம். ஏன் அதனை நீங்கள் நடைமுறைப்படுத்தவில்லை. இனி வரக்கூடிய காலங்களில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என நாள்தோறும் பிரித்து அதனை புகைப்படம் எடுத்து எனக்கு அனுப்ப வேண்டும் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.