வேலூர்-ஆற்காடு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
வேலூர் மாநகராட்சியின் பிரதான சாலைகளில் ஒன்றாக ஆற்காடு சாலை இருக்கின்றது. இங்கே நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது. அதிலும் குறிப்பாக தனியார் மருத்துவமனையின் அருகே இருக்கும் பகுதிகளில் நடைபாதை கடைகள், தள்ளுவண்டி கடைகளில் ஆக்கிரமிப்பு பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை காணப்பட்டது. மேலும் டீக்கடை, ஹோட்டல்கள், மருந்து கடைக்கு வரும் நபர்கள் தங்களின் இருச்சக்கர வாகனங்களை சாலையில் ஆங்காங்கே நிறுத்தி விடுகின்றார்கள். இதன் காரணமாக போக்குவரத்துக் கடும் நெரிசலுக்குள்ளாகிறது.
இதனால் பொதுமக்கள் இது குறித்து ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளார்கள். அதன் பேரில் ஆட்சியர் வேலூர்-ஆற்காடு சாலையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். இதனால் போலீஸ் தலைமையிலான அதிகாரிகள் கொண்ட குழு நேற்று முன்தினம் ஆற்காடு சாலையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்கள். கடையில் வெளிப்பகுதியில் இருக்கும் விளம்பர பேனர்கள், மாவு பிசைய பயன்படுத்தும் மேசைகள், சமையல் அடுப்புகள் உள்ளிட்டவற்றை அகற்றினார்கள். மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோ என 110 வாகனங்களுக்கு 66,000 அபராதம் விதிக்கப்பட்டது. சில கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு அகற்றுவதை தெரிந்து அவர்களாகவே கடையில் பொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.