தூத்துக்குடி அருகே சக மாணவனின் வாகனத்தை திருடிய 19 வயது இளைஞன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வரும் மாணவர் ஒருவர் ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தை கல்லூரி வாசலில் நிறுத்திவிட்டு சென்று, பின் திரும்பி வந்து பார்த்த போது அதனை காணவில்லை. இதையடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதேபோல் நாசரேத் பகுதியில் மற்றொரு இடத்தில் எலக்ட்ரிக்கல் கடை முன்பு 53 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தன்னுடைய விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றிருந்தார். அவரது வாகனத்தையும் மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். இதையடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நாசரேத் காவல்துறை அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அதன்படி,
தனியார் கல்லூரியில் பயின்று வரும் 19 வயது மாணவர் ஒருவர் சக மாணவர்கள் மற்றும் அவரது தந்தைகளின் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடி அதனை வெளியூர்களில் விற்று வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் முதலில் திருடிய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இதற்கு முன்பாக திருடிய இருசக்கர வாகனங்களையும் மீட்க காவல்துறை அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.