டெல்லி வன்முறையில் உயிரிழந்த , வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்து முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வரும் நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மற்றொரு பிரிவினரும் கடந்த 23ம் தேதி போராட்டம் நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர்.
ஆனால் இந்த மோதல் மறுநாளில் மிகப்பெரும் வன்முறையாக வெடித்தது. ஜாப்ராபாத், மவுஜ்பூர், சந்த்பாக், குரேஜிகாஸ், பஜன்புரா, யமுனா விகார் என வடகிழக்கு டெல்லி முழுவதும் வன்முறை பரவியது. வன்முறையாளர்கள் கடைகள், வீடுகளுக்கு தீ வைத்தும், கல், செங்கல், பாட்டில்களை வீசியும் பயங்கர மோதலில் ஈடுபட்டனர். சில இடங்களில் துப்பாக்கிச்சூடும் நடந்தது.
இதையடுத்து வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர துணை ராணுவம் அழைக்கப்பட்டது. மேலும் வன்முறை பாதித்த பகுதிகளில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதனால் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு தொடர்ந்து பதற்றம் நீடித்து வந்தது. இந்த வன்முறையில் நேற்று வரை 27 பேர் பலியாகி இருந்தனர். தற்போது மேலும் 8 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ 21 லட்சமும் , வீடுகளை இழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ 5 லட்சமும் , காயமுற்றவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சையும் செய்யப்படும் என்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சி சார்பில் உயிரிழந்த தலைமை காவலர் ரத்தன்லால் குடும்பத்திற்கு ரூ 1 கோடி இழப்பீடு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.