தெலுங்கு சினிமாவில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இவர் தமிழில் நோட்டா என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அண்மையில் வெளியான லைகர் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா சமந்தாவுடன் இணைந்து குஷி என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், அனைத்து மொழி படங்களிலும் விஜய் தேவரகொண்டாவுக்கு நடிப்பதற்கு வாய்ப்புகள் வருகிறது.
இந்நிலையில் பிரின்ஸ் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக ஹைதராபாத் சென்றிருந்த சிவகார்த்திகேயன் நடிகர் விஜய் தேவரகொண்டாவை சந்தித்து பேசியுள்ளார். இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் தேவர கொண்டாவும், நடிகர் சிவாவும் ஒன்றாக இணைந்து பிரின்ஸ் பட விழாவில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, நடிகர் விஜய் தேவரகொண்டா பார்ப்பதற்கு ஒரு பிரின்ஸ் போன்று இருக்கிறார்.
மிகவும் குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவர் தற்போது இந்தியா முழுவதும் அனைவரும் அறியும் பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ளார். இவருடைய வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் இருக்கிறது. எனக்கும் அவருடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று ரொம்ப ஆசையாக இருக்கிறது என்று கூறினார். மேலும் இதன் மூலம் இருவரும் விரைவில் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கலாம் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.