பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியின் போது முகமது நவாஸ் அடித்த பந்து ஷான் மசூத்தின் தலையில் பட்டு அவர் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் அனைத்து தகுதி சுற்று ஆட்டங்கள் முடிவடையும் நிலையில், ஏற்கனவே குரூப் ஏ பிரிவில் நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டத்தில் வெற்றிபெற்று இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் 4 புள்ளிகளுடன் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதேபோல குரூப் பி பிரிவில் இன்று வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அயர்லாந்து அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
நாளை முதல் பிரதான சூப்பர் 12 சுற்று தொடங்கும் நிலையில் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை 23ஆம் தேதி இந்தியா- பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியை உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இதற்கிடையே இருநாட்டு வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பாகிஸ்தான் அணியினரும் தீவிர பயிற்சி மேற்கண்ட போது ஒரு அசம்பாவித சம்பவம் நடந்துள்ளது.
ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில், பாகிஸ்தானின் டாப் ஆர்டர் பேட்டர் ஷான் மசூத், சக வீரரின் ஷாட் மூலம் தலையில் அடிபட்டார். 3-வது இடத்தில் விளையாடும் இடது கை பேட்டர், தலையில் அடிபட்ட பிறகு 5-7 நிமிடங்கள் தரையில் கிடந்ததாக கூறப்படுகிறது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (எம்சிஜி) பாகிஸ்தானின் பயிற்சியின் போது இந்த சம்பவம் நடந்தது.
ஆம், இன்று அருகருகே பயிற்சி செய்தபோது போது, முகமது நவாஸ் அடித்த ஒரு ஷாட் மசூத்தின் தலையின் வலது பக்கத்தில் பலமாக தாக்கியது. இதில் அவர் சுருண்டு விழுந்ததும் அணியின் மருத்துவரும், பிசியோவும் விரைந்து வந்து அவரை உன்னிப்பாகப் பார்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.. பின்னர் ஸ்கேன் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்கு செல்லப்படுவதற்கு முன்பு மசூத் மைதானத்தில் சிகிச்சை பெறும் வீடியோ ட்விட்டரில் வெளியாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுடன் ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி மோதுவதற்கு 2 நாட்களுக்கு முன்புதான் காயம் வந்துள்ளது. பாகிஸ்தானின் மூன்றாவது பேட்ஸ்மேனாக ஃபக்கர் ஜமானுக்குப் பதிலாக மசூத் இடம்பிடித்திருந்தார். இதனிடையே மசூத் காயம் பெரிதாக இருக்கக்கூடாது என பாக்.,ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர். 33 வயதான ஷான் மசூத் பாகிஸ்தானுக்காக 25 டெஸ்ட் போட்டிகளுடன் 12 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
பாகிஸ்தான் :
பாபர் ஆசாம் (கே), ஷதாப் கான், ஆசிப் அலி, ஃபகர் ஜமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ரவுப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்ரிடி, ஷான் மசூத்.
காத்திருப்பு வீரர்கள் :
உஸ்மான் காதர், முகமது ஹாரிஸ், ஷாநவாஸ் தஹானி.
https://twitter.com/asfeworld_tv/status/1583344842859769856