சென்ற 27/02/2020 அன்று டெல்லியின் கஜூரி காஸ் பகுதியில் நடைபெற்ற கலவரத்தின்போது, 45 வயதுடைய ஒருவர் சுயநினைவின்றி காணப்பட்டார். இதையடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில் இறந்த வரை அடையாளம்காண அவரது உறவினர்கள் யாரும் காவல்துறையை அணுகவில்லை. இதனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தியும் அது தோல்வியில் முடிந்தது.
தற்போது சுமார் 2 வருடங்களுக்கு பின் இறந்தவர் உடல் 11/03/2022 அன்று பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. பின் மிகுந்த சிரமத்துக்குப் பிறகு, இறந்தவர் சிக்கந்தர் என அடையாளம் காணப்பட்டார். அவர் வட கிழக்கு டெல்லியிலுள்ள சந்த் பாக் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். அதனை தொடர்ந்து இறுதிச்சடங்குகள் செய்ய அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இறந்தவரின் பிரேதப்பரிசோதனை அறிக்கையில் மூச்சுத்திணறல் காரணமாக இறந்தது தெரியவந்தது. எனினும் குடும்பத்தினர் அவரது இறப்பில் மர்மம் உள்ளதாக நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதன் காரணமாக போலீசார் வழக்குபதிவு செய்ய கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி 19/10/2022 அன்று, கஜூரி காஸ் தானேயில் ஐபிசி 304 பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.