தஞ்சாவூர் அருகே எல்ஃபின் e-com பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மோசடி செய்தது தொடர்பாக ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதன் மற்றொரு ஒருங்கிணைப்பாளரும் நேற்று கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்ட மக்களின் வாட்ஸ்அப் நம்பர்களுக்கு விளம்பர செய்தி ஒன்று வேகமாக பரவி வந்துள்ளது. அதில், திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு எல்ஃபின் e-com பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனியின் அலுவலக கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற இருப்பதாகவும், அதில் கலந்து கொள்வதன் மூலம் வருமானம் ஈட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதை நம்பி பட்டுக்கோட்டையை சேர்ந்த நபர் நிகழ்ச்சியை நடத்திய ஒருங்கிணைப்பாளர் நேரில் சந்தித்து ஆலோசனை பெற்றார். அதில், அவர் கூறியதாவது, ரூபாய் 12 ஆயிரம் பணம் கொடுத்து விட்டு இரண்டு நபர்களை இதில் சேர்த்து விட வேண்டும் இவ்வாறு செய்தால் 12 ஆயிரத்திற்கு உரிய வீட்டுமனை, 12 ஆயிரத்திற்கும் மேல் மதிப்புள்ள வீட்டுப் பொருட்கள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.
இதை நம்பி அந்த நபர் ரூபாய் 12,000 கொடுக்க உரிய ரசீது கொடுக்காமல் பொருளும் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் தெரிவிக்க வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் கடந்த 8ம் தேதி அந்நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளரான வெங்கடேஷ் என்பவரை கைது செய்தனர்.
பின் தலைமறைவாக இருந்த மர்ம நபர்கள் சிலரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் மற்றொரு ஒருங்கிணைப்பாளரான தஞ்சையை சேர்ந்த கிங்ஸ்லி என்பவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். மேலும் முக்கிய குற்றவாளியான சத்தியபிரியா என்பவரை காவல்துறையினர் தற்போது வலைவீசி தேடி வருகின்றனர்.