இந்தியாவின் ஷமி, புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் பாகிஸ்தான் வீரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் ஜாவேத் எச்சரித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டிகள் நேற்றோடு முடிந்த நிலையில், 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன. இதில் ஏ பிரிவில் இருந்து இலங்கை மற்றும் நெதர்லாந்து அணியும், பி பிரிவிலிருந்து ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணியும் தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டியில் இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. மேலும் மற்றொரு ஆட்டத்தில் 4.30 மணிக்கு ஆப்கானிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
அதனைத்தொடர்ந்து நாளை (23ஆம் தேதி) உலக கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது. இதற்கிடையே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் வலுவான வேகத் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் வீரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆக்கிப் ஜாவேத் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி மற்றும் புவனேஷ்வர் குமாருக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டர்கள் ரன்களை எடுப்பது எளிதானது அல்ல. ஆஸ்திரேலியாவில் 2022 டி 20 உலகக் கோப்பைக்கு ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பெரிய அடியாக இருக்காது. பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் எம்சிஜியில் பவர்பிளேயில் புவனேஷ்வரின் ஸ்விங் மற்றும் ஷமியின் வேகத்தை எதிர்கொள்வது கடினமான பணியாக இருக்கும் என்றார்.
அதாவது, ஷமி மற்றும் புவனேஷ்வர் சிறந்த சீம் பவுலர்கள். அவர்களுக்கு எதிராக ரன்களை எடுப்பது கடினமாக இருக்கும் என்பதால் பாகிஸ்தான் அணி சிரமத்தை எதிர்கொள்ளும் என்று கூறுகிறார்.
இதற்கிடையில், முதுகு காயத்தால் 2022 டி 20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்ட பும்ரா இல்லாததால் இந்தியாவின் வேகத் தாக்குதல் சற்று பலவீனமாக இருப்பதாக பலர் கருதுகின்றனர், ஆனால் ஜாவேத் இந்த டி20 போட்டியில் இந்தியாவின் வாய்ப்புகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கவில்லை. ஆஸ்திரேலிய மைதானங்களில் சிறந்த பந்துவீச்சாளர்கள் (புவனேஸ்வர் குமார், ஷமி) உள்ளதாக அவர் நினைக்கிறார்..