லஞ்சம் கேட்டு வற்புறுத்திய பெண் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்யதுள்ளனர்.
சென்னை கொளத்தூரில் சேர்ந்த மருத்துவரான வினோத்குமார் என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவை சேர்ந்த மோனிகா ஸ்ரீ என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமணத்தின் போது மோனிகா ஸ்ரீயின் பெற்றோர் 200 பவுன் நகை வரதட்சணையாக தருவதாக கூறியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் பேசியபடி வரதட்சணை கொடுக்காததால் ஆத்திரமடைந்த வினோத்குமார் மற்றும் அவரது பெற்றோர் மோனிகா ஸ்ரீ கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் மோனிகா ஸ்ரீ வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சனை கொடுமை குறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் டாக்டர் வினோத்குமார் அவரது பெற்றோர்கள் உட்பட 8 பேரை கைது செய்தனர். இதனை அடுத்து சில நாட்களில் மோனிகா ஸ்ரீ மற்றும் வினோத்குமாரின் குடும்பத்தினர் சமரசம் ஆகியதால் அவர் அந்த வழக்கை முடித்து வைக்க கோரி வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அனுராதாவிடம் கூறியுள்ளார். அதற்கு அனுராதா 1 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார்.
அதன்படி மோனிகா ஸ்ரீயும் அனுராதா கேட்ட 1 லட்சத்தை கூறியதாக கூறப்படுகிறது. மேலும் பணம் வாங்கிக் கொண்ட அனுராதா வழக்கை முடித்து வைக்காமல் மேலும் 20 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மோனிகா ஸ்ரீ சென்னையில் லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ரசாயன பொடி தடவிய 20 ஆயிரம் ரூபாய் மோனிகா ஸ்ரீயிடம் கொடுத்து இன்ஸ்பெக்டர் அனுராதாவிடம் கொடுக்குமாறு கூறிய நிலையில் அவரும் அந்த பணத்தை அனுராதாவிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அனுராதாவை கையும் களவுமாக கைது செய்துள்ளனர். மேலும் அனுராதா ஏற்கனவே சிவகங்கை மாவட்டத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த போது இதேபோல் லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.