டி20 உலகக் கோப்பை 2022ல் இருந்து அணி முன்கூட்டியே வெளியேறியதால் ரசிகர்கள் மற்றும் சக வீரர்களிடம் மன்னிப்பு கேட்டார் விண்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரான்..
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் ஐசிசி டி20 உலக கோப்பை தகுதி சுற்று போட்டியில் நேற்று குரூப் பி பிரிவில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் – அயர்லாந்து அணிகள் ஹோபார்ட்டில் மோதியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 146 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பிராண்டன் கிங் 48 பந்துகளில் (6 பவுண்டரி, 1 சிக்ஸர்) 62 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி 17.3 ஓவரில் 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்டர்லிங் 48 பந்துகளில் (6 பவுண்டரி, 2 சிக்ஸர்) 66* ரன்களும், டக்கர் 35 பந்துகளில் (2 பவுண்டரி, 2 சிக்ஸர்) 45* ரன்களும், பால்பிர்னி 23 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர் உட்பட 37 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். இந்த வெற்றியின் மூலம், அயர்லாந்து 2009 க்குப் பிறகு டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது சுற்றுக்கு இரண்டாவது முறையாக தகுதி பெற்று வரலாறு படைத்தது, அதே நேரத்தில் இரண்டு முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணியினர் உடைந்த இதயங்களுடன் வீடு திரும்புவார்கள்.
இதையடுத்து டி20 உலகக் கோப்பை 2022ல் இருந்து அணி முன்கூட்டியே வெளியேறியது குறித்து வெஸ்ட் இண்டிஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரன் மிகுந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தி, குரூப் ஸ்டேஜ் ஆட்டங்களில் தனது மோசமான செயல்பாட்டிற்காக ரசிகர்கள் மற்றும் சக வீரர்களிடம் மன்னிப்பு கேட்டார்.
போட்டிக்குப் பிறகு நிக்கோலஸ் பூரன் கூறியதாவது: “நாங்கள் எங்கள் ரசிகர்களையும் எங்களையும் ஏமாற்றிவிட்டோம். கண்டிப்பாக வலிக்கிறது. நான் ஆடிய விதத்தில் என் ரசிகர்களை ஏமாற்றிவிட்டேன். இது கடினமானது, இந்த போட்டியில் நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை. ஒரு நல்ல பேட்டிங் மைதானத்தில் 145 ரன்கள் எடுத்துள்ளோம். இதனை கட்டுப்படுத்துவது பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் கடினமான பணியாகும். இது ஒரு சவாலாக இருக்கும்” என்றார்.
மேலும் டி20 உலகக் கோப்பை 2022 இன் சூப்பர் 12 க்கு தகுதி பெற்றதற்காக அயர்லாந்துக்கு வாழ்த்துக்கள், அவர்கள் இன்று (நேற்று) அற்புதமாக பேட்டிங் செய்து சிறப்பாக பந்துவீசினார்கள். நிறைய பாசிட்டிவ்கள் உள்ளன, ஜேசன் நன்றாக பந்துவீசுகிறார், கிங் அற்புதமாக பேட்டிங் செய்கிறார், ஜோசப் எங்களுக்காக சிறப்பாக பந்துவீச தொடங்கியுள்ளார். இது எங்களுக்கு ஒரு கற்றல் அனுபவம்.” என்றார்..