செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே புதிதாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தின் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில், கலெக்டர் ராகுல்நாத் இன்று ஆய்வு செய்தார். அதன் பிறகு கலெக்டர் ராகுல் நாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென்காசி, பாபநாசம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, விழுப்புரம், திருச்சி, திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்த பேருந்துகளில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்தவர்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்யலாம். இதில் குறிப்பாக மாம்பாக்கம், கிளாம்பாக்கம், திருப்போரூர், கண்டிகை, படப்பை, பெருங்களத்தூர், ஊரப்பாக்கம், கூடுமாஞ்சேரி மற்றும் நந்திப்பாக்கம் போன்ற பகுதிகளை சேர்ந்த பயணிகள் கோயம்பேடுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர்கள் முன்பதிவு செய்து இருந்தால் கிளாம்பாக்கத்திலேயே பேருந்தில் ஏறிக்கொள்ளலாம். இங்கிருந்து இன்று முதல் 3 நாட்களுக்கு தினந்தோறும் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் இந்த பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான கழிவறை வசதிகள் இருப்பதோடு பாதுகாப்புக்காக 24 மணி நேரமும் போலீசாரும் இருப்பார்கள் என்று கூறியுள்ளார்.